காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார்.. டிரம்ப் மீண்டும் பேச்சு
குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்விவகாரம் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் கூறியிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாகக் கடந்த 24ம் தேதி இந்தியா வந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அவருக்கு நமஸ்தே டிரம்ப் என்ற பெயரில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் காந்தி ஆசிரமத்தையும், பின்னர் தாஜ்மகாலையும் பார்வையிட்டனர். பயணத்தின் 2வது நாளான நேற்று, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், 3 பில்லியன் டாலர்(ரூ.21,600 கோடி) மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதைத் தொடர்ந்து, டிரம்ப், மோடி கூட்டறிக்கை வெளியிட்டனர். பின்னர், டிரம்ப் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:இந்த 2 நாட்களும் அற்புதமான நாட்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். மக்களுக்குத் தேவையான சரியான முடிவை இந்திய அரசு எடுக்கும் என்று நான் நம்புகிறேன்.
காஷ்மீர் பிரச்சினைதான், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான மிகப்பெரிய பிரச்சினையாகும். மோடியுடனும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடனும் எனக்கு நல்ல நட்பு உண்டு. எனவே, என்னால் இந்த பிரச்சினையில் ஏதாவது செய்ய முடியும் என்றால் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். பாகிஸ்தான் தற்போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தி வருகிறது. நான் இரு பிரதமர்களிடமும் நல்ல நட்பு வைத்திருப்பதால், காஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்து வைக்கத் தயாராக உள்ளேன். பிரதமர் மோடியுடன் மதசுதந்திரம் பற்றியும் பேசியிருக்கிறேன். மக்களுக்கு மத சுதந்திரம் இருக்க வேண்டும் என்றுதான் பிரதமர் மோடி விரும்புகிறார். முஸ்லிம்களுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதாகவும் பிரதமர் மோடி என்னிடம் தெரிவித்தார்.
இந்தியா எங்களிடம் இருந்து ஏராளமான ராணுவத் தளவாடங்களை வாங்கி வருகிறது. அதே சமயம், அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிகமான வரி விதிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக் போன்ற பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது. இதில், இந்தியா நியாயமாகச் செயல்பட வேண்டும்.இவ்வாறு டிரம்ப் கூறினார்.
காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வதாக ஏற்கனவே டிரம்ப் கூறியிருந்தார். அதற்கு இந்தியா தரப்பில், இந்த பிரச்சினையில் 3வது நபர் தலையீட்டை இந்தியா ஏற்காது என்று பகிரங்கமாக மறுத்திருந்தது. தற்போது டிரம்ப் மீண்டும் அதையே கூறியுள்ளார்.