டெல்லி கலவரத்தை ஒடுக்கக் களமிறங்கிய அஜித்தோவல்..
டெல்லியில் வன்முறை நடந்த பகுதிகளில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் பார்வையிட்டு, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கலவரத்தை ஒடுக்க போலீசாருக்கு முழு சுதந்திரம் தரப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராகவும், அடுத்து வரவுள்ள என்.பி.ஆர், என்.ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராகவும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் ஷாகீன்பாக் என்னும் இடத்தில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குடும்பத்துடன் அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்தும் முடங்கியே இருக்கிறது.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி ஞாயிறன்று, வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்குப் போட்டியாக சிஏஏ ஆதரவு போராட்டங்களை பாஜக பிரமுகர் கபில் மிஸ்ரா நடத்தினார். இதன்பின், சிஏஏ எதிர்ப்பு மற்றும் சிஏஏ ஆதரவு பிரிவினரிடையே மோதல் வெடித்தது.
கடந்த 3 நாட்களாக டெல்லியில் மவுஜ்பூர், ஜாப்ராபாத், சீலாம்பூர் போன்ற பகுதிகளில் கல்வீச்சு, வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. இதில் இன்று(பிப்.26) காலை வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, டெல்லி வன்முறைகள் மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். ஏற்கனவே அரசிலயமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீரில் அஜித்தோவல் முகாமிட்டு கலவரக்காரர்களை ஒடுக்கினார். காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், அங்கு அதிக அளவிலான படைகளைக் குவித்து மயான அமைதியை ஏற்படுத்தினார்.
தற்போது டெல்லியிலும் அவர் களமிறக்கி விடப்பட்டிருக்கிறார். இதையடுத்து, டெல்லியில் கலவரம் பாதித்த ஜாப்ராபாத், சீலாம்பூர், மவுஜ்புர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அஜித்தோவல் நேற்று சென்று, மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வன்முறைகளைத் தடுக்க போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.