சிம்புவின் மாநாடு படப்பிடிப்புக்கு ரூ. 30 கோடி இன்சூரன்ஸ்.. இந்தியன் 2 பட விபத்து எதிரொலி..
கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பின்போது கிரேன் சரிந்து விழுந்ததில் உதவி இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் பலியானதுடன் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து படப்பிடிப்பு தளங்களில் நடிகர், நடிகை, தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்தனர். அந்த நடைமுறை தற்போது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் அமலுக்கு வந்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். அவர், படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்குச் சேர்த்து ரூ 30 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்திருக்கிறார். இதற்கு ஜிஎஸ்டியாக ரூ 7.8 லட்சம் செலுத்தியுள்ளார். அவரது செயலுக்கு திரையுலகினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.