டெல்லி போலீசாரை கடுமையாக விமர்சித்த ஐகோர்ட் நீதிபதி மாற்றம்..

டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க தவறிய போலீசாரை கடுமையாக விமர்சித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் மற்றும் ஆதரவு தெரிவிக்கும் போராட்டக்காரர்கள் இடையே கடந்த 23ம் தேதி மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து நான்கு நாட்களாக நடந்த வன்முறைச் சம்பவங்களில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நேற்று முன் தினம்(பிப்.25) நடந்த வன்முறைகளில் காயமடைந்தவர்களில் முஸ்லிம்கள் சிலர் ஒரு சிறிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களை அருகில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல அவர்கள் பயந்தனர். இதையடுத்து, தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமென்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்தனர். இதை இரவே விசாரித்த நீதிபதி எஸ்.முரளிதர் அமர்வு, காயமடைந்தவர்களை இடமாற்றம் செய்யத் தகுந்த பாதுகாப்பு அளிக்க டெல்லி போலீசுக்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று(பிப்.26) இந்த வழக்கு மீண்டும் நீதிபதி எஸ்.முரளிதர், நீதிபதி தல்வந்த் சிங் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனித உரிமை ஆர்வலர் ஹர்ஷ்மந்தர், பராக் நக்வி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களின் மீது விசாரணை நடந்தது. அப்போது, சில வீடியோக்களை பார்வையிட்டனர். அதில், பாஜக பிரமுகர் கபில் மிஸ்ரா உள்ளிட்ட சிலர் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியிருந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதை பார்த்த நீதிபதி முரளிதர், இப்படி வன்முறையைத் தூண்டும் விதத்திலான பேசியவர்கள் மீது ஏன் எப்ஐஆர் கூட போடவில்லை? நீங்கள் பாரபட்சம் காட்டாமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால், கலவரங்களைத் தடுத்திருக்கலாம். 1984ல் நடந்ததை போன்று(சீக்கியர் கொல்லப்பட்ட கலவரம்) மீண்டும் ஒரு கலவரம் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத இ.பி.கோ. 153(ஏ)(பி)ன் கீழ் எப்.ஐ.ஆர். போட்டிருக்க வேண்டும். டெல்லியில் 4 நாட்களாக நீடித்து வரும் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், நீதிபதி எஸ்.முரளிதர் நேற்றிரவு பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவரது இந்த பணியிட மாற்றம் ஏற்கனவே கடந்த 12ல் நடந்த சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் முடிவு செய்திருந்த விஷயம்தான். ஆனாலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறையை கடுமையாக விமர்சித்திருக்கும் நிலையில், டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

More News >>