நீதிபதி மாற்றத்தை அரசியலாக்குவதா? காங்கிரசுக்கு அமைச்சர் கண்டனம்..

நீதிபதியின் வழக்கமான பணியிட மாற்றத்தைக் காங்கிரஸ் அரசியலாக்குகிறது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.முரளிதர் நேற்றிரவு பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த இடமாற்றம் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் எடுத்த முடிவு என்றாலும், நேற்றிரவு அவசரமாக உத்தரவு பிறப்பித்தது சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில் அவர், டெல்லி ஐகோர்ட் நீதிபதி எஸ்.முரளிதர் ஒரு உத்தரவு பிறப்பித்த சூழலில், நள்ளிரவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. இது அவமானகரமானது என்று கூறியிருந்தார்.

இதற்கு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், நீதிபதி முரளிதர் மாற்றம் கடந்த 12ம் தேதி சுப்ரீம் கோர்ட் கொலிஜியத்தால் எடுக்கப்பட்ட முடிவு. இதற்கு அந்த நீதிபதியிடம் சம்மதம் பெறப்பட்டிருக்கிறது. எனவே, வழக்கமான பணியிட மாற்றத்தைக் காங்கிரஸ் அரசியலாக்குவது, நீதித்துறை மீதான அதன் அலட்சியப் போக்கைக் காட்டுகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ், நாட்டின் உயர்ந்த அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தும் வேலையைச் செய்து வருகிறது என்றார்.

More News >>