சாதிவாரி கணக்கெடுப்பு.. பீகார் சட்டசபை தீர்மானம்..
சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இதனால், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்தது. அதனால், நிதிஷ்குமாருக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த சிலரே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நிதிஷ்குமார், சிஏஏ சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு வராது. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு(என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) ஆகியவற்றிலும் யாருக்கும் பாதிப்பு வராதவாறு பார்த்துக் கொள்வோம் என்று கூறி வந்தார்.
எனினும், முக்கிய எதிர்க்கட்சியான லாலுவின் ஆர்ஜேடி, இது தொடர்பாகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி வந்தது. இதையடுத்து, பீகாரில் என்.ஆர்.சியை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலச் சட்டசபையில் ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கடந்த 2010ல் நடத்தப்பட்ட அதே கேள்விகளுடன் என்பிஆர் எடுக்கப்படும் என்றும், மத்திய அரசு புதிதாகத் தயாரித்துள்ள சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம்பெறாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானங்களுக்குப் பீகாரில் பாஜகவின் எம்.எல்.ஏ.க்களே ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று(பிப்.27) அம்மாநிலச் சட்டசபையில் இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.