டெல்லி வன்முறைச் சம்பவங்கள்.. ஜனாதிபதியுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு..

டெல்லி வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று அமித்ஷாவை பதவி விலகச் செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி கமிட்டியின் செயற்குழு கூட்டம் நேற்று(பிப்.26), டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், ஜோதிராதித்ய சிந்தியா, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராகுல்காந்தி வெளிநாடு சென்று விட்டதால், அவர் பங்கேற்கவில்லை.

டெல்லியில் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் குறித்தும், மத்திய, டெல்லி மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர், டெல்லி கலவரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே பொறுப்பு ஏற்க வேண்டுமென்றும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், சோனியா காந்தி தலைமையில் மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று காலையில் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தத்தைச் சந்தித்தனர். அவரிடம் டெல்லி வன்முறைகள் தொடர்பாகவும், மத்திய, மாநில அரசுகள் குறித்தும் மனு அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் சோனியா காந்தி கூறுகையில், டெல்லி வன்முறைச் சம்பவங்கள் குறித்து குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தோம். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சொத்துக்களைக் காப்பாற்றவும் மத்திய அரசுக்குத் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வலியுறுத்தினோம். கலவரங்களுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலகச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம் என்றார்.

மன்மோகன்சிங் கூறுகையில், டெல்லியில் கடந்த 4 நாட்களாக நடந்த வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறியது குறித்து விளக்கினோம். இது வரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். அது குறித்த எங்கள் கவலையைத் தெரிவித்தோம் என்றார்.

More News >>