எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வர வேண்டாம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை

பேராசிரியர் அன்பழகன் உடல்நலக் குறைவாக இருப்பதால், எனது பிறந்த நாளை கொண்டாட விரும்பவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலமின்றி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்து வருகிறார்.மு.க.ஸ்டாலினுக்கு வரும் மார்ச் 1ம் தேதி பிறந்த நாள். தனது பிறந்தநாளன்று குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடுவதுடன், தொண்டர்கள் மத்தியிலும் கேக் வெட்டி அவர்களின் வாழ்த்துகளையும் பெறுவார். தற்போது அன்பழகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், இம்முறை பிறந்த நாளை கொண்டாட விரும்பவில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் நேற்று(பிப்.27) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழினத்தின் நிரந்தர பேராசிரியரும், தி.மு.க. பொதுச்செயலாளரும், எனது பெரியப்பாவுமான க.அன்பழகன் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.முக்கால் நூற்றாண்டு காலம் இந்த இனத்துக்கும், மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும், திராவிட இயக்கத்துக்கும் பெருந்தொண்டாற்றிய அவர் உடல் நலிவுற்றிருக்கும் இந்த சூழலில் மார்ச் 1ம் தேதி, நான் எனது பிறந்தநாளைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை.எனவே, கட்சியின் முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் என் மீது அன்பு கொண்ட நண்பர்கள் யாரும் மார்ச் 1-ம் தேதி என்னை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல வரவேண்டாம் எனப் பணிவன்புடன் வேண்டுகிறேன். தமிழர் நலன் காக்கத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட க.அன்பழகன் நலம் பெற அனைவரும் தங்களது உள்ளார்ந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்திக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More News >>