வெறுப்புணர்வு பேச்சுகளுக்கு வழக்குப் போடும் சூழல் இல்லை.. டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்..
டெல்லி வன்முறை தொடர்பாக வெறுப்பூட்டும் வகையில் பேசியவர்கள் மீது வழக்கு தொடர தற்போதைய சூழல் இடமளிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் மற்றும் ஆதரவு தெரிவிக்கும் போராட்டக்காரர்கள் இடையே கடந்த 23ம் தேதி மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து நடந்த வன்முறைச் சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவரம் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் ஹர்ஷ்மந்தர், சமூக ஆர்வலர் பராக் நக்வி ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.முரளிதர், நீதிபதி தல்வந்த் சிங் ஆகியோர் முன்பாக கடந்த 26ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சில வீடியோக்களை பார்வையிட்டனர். அதில், பாஜக பிரமுகர் கபில் மிஸ்ரா உள்ளிட்ட சிலர் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியிருந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதைப் பார்த்த நீதிபதி முரளிதர், இப்படி வன்முறையைத் தூண்டும் விதத்திலான பேசியவர்கள் மீது ஏன் எப்ஐஆர் கூட போடவில்லை? நீங்கள் பாரபட்சம் காட்டாமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால், கலவரங்களைத் தடுத்திருக்கலாம். 1984ல் நடந்ததை போன்று(சீக்கியர் கொல்லப்பட்ட கலவரம்) மீண்டும் ஒரு கலவரம் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத இ.பி.கோ. 153(ஏ)(பி)ன் கீழ் எப்.ஐ.ஆர். போட்டிருக்க வேண்டும். டெல்லியில் 4 நாட்களாக நீடித்து வரும் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கண்டனம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, நீதிபதி எஸ்.முரளிதர் ஏற்கனவே முடிவு செய்தபடி பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் டி.என்.பட்டேல், சி.ஹரிசங்கர் ஆகியோர் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, டெல்லியில் நடந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பான தகவல்களும், ஆதாரங்களும் மத்திய அரசிடம் உள்ளன. இது தொடர்பான அனைத்து வீடியோக்களும் மத்திய அரசு அதிகாரிகளால் பார்க்கப்பட்டுள்ளன. வெறுப்புணர்வு பேச்சுகள் பேசியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்வதற்கான சூழ்நிலை தற்போது ஏற்படவில்லை. நிலைமை சீரடைந்ததும் இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கப்படும். எனவே, அதற்குச் சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. அது வரை நீதிமன்றத்தின் குறுக்கீடு இருக்கக் கூடாது. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இது வரை 48 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன” என்று கூறினார்.
மேலும், டெல்லியில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளதால், மத்திய அரசையும் இந்த வழக்கில் சேர்த்து கொள்ளவேண்டும் என்றும் கோரினார்.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசை இந்த வழக்கில் சேர்க்க அனுமதி அளித்த நீதிபதிகள், மத்திய அரசு விரிவான பதில் அளிக்க 3 வார அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை ஏப்ரல் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.