ரஜினி, நயன்தாரா சம்பளம் குறைப்பு.. அண்ணாத்த படத்தில் அதிரடி..
ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தைச் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்துக்குச் சமீபத்தில் அண்ணாத்த என டைட்டில் வைக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் எனப் பெரிய நடிகைகள் பட்டாளம் படத்தில் இணைந்திருக்கின்றனர். வழக்கறிஞர் வேடத்தில் நயன்தாரா நடிப்பதாகத் தெரிகிறது.மேலும் பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி இமான் இசை அமைக்கிறார். இதுவரை இரண்டு கட்டமாகப் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இப்படத்தில் ரஜினிக்கு வழங்கப்படும் சம்பளம் குறைக்கப்பட்டிருப்பதாகக் கடந்த சில தினங்களாகத் தகவல் வெளியாகி வருகிறது. அதேபோல் நயன்தாராவுக்கும் குறிப்பிட்ட சதவீத அளவு சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறதாம். திடீரென்று சம்பளம் குறைக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பதுபற்றி கோலிவுட்டில் விசாரித்தபோது, ஏற்கனவே ரஜினி, நயன்தாரா நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தியதுடன் ரஜினி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தித் தங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரினர். இதுபற்றி வினியோகஸ்தர் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர் பேட்டி அளித்தபோது,'தர்பார் படத்தில் வினியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்ட ஈடு பற்றி இருதரப்பிலும் பேசி தீர்வு காணப்படும்' என்றார்.
படத்தை அதிக விலைக்கு விற்பதால் இதுபோல் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அண்ணாத்த பட வெளியீட்டுக்கு பிறகு பிரச்சினை எதுவும் வரக்கூடாது என்பதற்காகவே முன்னதாக சம்பளத்தைக் குறைத்து படம் வெளியாகும்போது சரியான வியாபாரம் நடத்தி முடிப்பதற்காக இதுபோன்ற ஒரு ஏற்பாடு நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.