மதக் கலவரங்களைத் தூண்டும் எதிர்க்கட்சிகள்.. அமித்ஷா குற்றச்சாட்டு
குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி எதிர்க்கட்சிகள் தவறாகப் பிரச்சாரம் செய்து, மதக் கலவரங்களைத் தூண்டி விடுகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராகவும், என்.பி.ஆர், என்.ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராகவும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் கடந்த வாரம் சிஏஏ எதிர்ப்பாளர்கள் மற்றும் சிஏஏ ஆதரவாளர்கள் இடையே மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து ஜாப்ராபாத், மவுஜ்பூர் உள்படப் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்த கலவரங்களில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பாஜக சார்பில் சிஏஏ ஆதரவு பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தவறான தகவலை எதிர்க்கட்சியினர் பரப்பி வருகின்றனர். இந்த சட்டத்தால் முஸ்லிம்கள் குடியுரிமையை இழப்பார்கள் என்று அவர்கள் பொய்யாகப் பிரச்சாரம் செய்து மதக்கலவரங்களைத் தூண்டி விடுகிறார்கள். இந்த சட்டத்தின் மூலம் இந்தியர்கள் எவருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. இந்திய முஸ்லிம்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் இந்த சட்டத்தைப் புரிந்து கொண்டு இதற்கு ஆதரவாகத் திரள வேண்டும்.இவ்வாறு அமித்ஷா பேசினார்.