போலீஸ் பாதுகாப்பு.. ரஜினி திடீர் மறுப்பு..

ரஜினி தனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் நடத்திய பேரணியில் ராமர் படத்தைச் செருப்பால் அடித்ததாக ரஜினி பேசினார். பெரியார் எத்தனையோ சமூக மாற்றங்களை ஏற்படுத்திய தலைவர் என்றும், கேரள மாநிலம் வைக்கத்தில் போராட்டம் நடத்தி தாழ்த்தப்பட்டோருக்குக் கோயிலில் நுழைய அனுமதி பெற்றுத் தந்தவர் என்றும் அதையெல்லாம் விட்டுவிட்டு அவரை ரஜினி விமர்சித்தது ஏன்? என்று திராவிடர் இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர். அதற்கு பிறகும் ரஜினி, நான் பேசியது சரிதான், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறினார்.

இதையடுத்து, திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் ரஜினி வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். இதனால், போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து அந்த பாதுகாப்பு நீடித்து வருகிறது.

தற்போது அந்த பாதுகாப்பை நீட்டிப்பது தொடர்பாக ரஜினியிடம் கருத்துக் கேட்பதற்காக காவல்துறை நுண்ணறிவு பிரிவு(உளவுபிரிவு) துணை ஆணையர் திருநாவுக்கரசு சென்றார். அவர் ரஜினியைச் சந்தித்து இது பற்றிப் பேசினார். அப்போது தனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று ரஜினி கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு, அந்த போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெறுவது குறித்து முடிவெடுப்பதாக துணை ஆணையர் திருநாவுக்கரசு, ரஜினியிடம் கூறியிருக்கிறார்.

More News >>