விதி என்னை துப்பறிவாளன் 2 இயக்குநர் ஆக்கிவிட்டது.. நடிகர் விஷால் மகிழ்ச்சி..
நடிகர் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் 2ம் பாகம் படத்தை மிஷ்கின் இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்பு லண்டனில் ஒரு மாதம் நடந்தது. இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் படத்திற்கான பட்ஜெட்டை உயர்த்தி கேட்டாராம். இதனால் ஹீரோவும் தயாரிப்பாளருமான விஷால் அதிர்ச்சி அடைந்தார். அவ்வளவு பட்ஜெட் தர முடியாது என்று அவர் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து மிஷ்கினை இயக்குநர் பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டுத் தானே அந்த பொறுப்பை ஏற்றிருக்கிறார் விஷால்.
தன் படத்தைத் தானே இயக்குவது குறித்து விஷால் கூறும்போது.' உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டுத் தான் நடிக்க வந்தேன். உதவி இயக்குநராக இருந்த அனுபவம் எனக்கிருக்கிறது. சொந்தமாகப் படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அநேகமாக அடுத்த ஆண்டு இயக்குநர் பணியை மேற்கொள்ள எண்ணியிருந்தேன். நான் விதியை நம்புபவன். அதனால் அது என்ன சொல்கிறதோ அதைச் செய்கிறேன். துப்பறிவாளன் 2 படத்தை இயக்குவதற்கு ஆவலாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்' என்றார்.
இதற்கிடையில் விஷால் புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கும் சக்ரா படத்தில் நடித்து வருகிறார்.