டெல்லி கலவரத்தில் பலி 46 ஆக அதிகரிப்பு..
டெல்லி வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராகவும், என்.பி.ஆர், என்.ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராகவும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 23ம் தேதி ஞாயிறன்று, வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்குப் போட்டியாக சிஏஏ ஆதரவு போராட்டங்களை பாஜக பிரமுகர் கபில் மிஸ்ரா நடத்தினார். இதன்பின், சிஏஏ எதிர்ப்பு மற்றும் சிஏஏ ஆதரவு பிரிவினரிடையே மோதல் வெடித்தது. டெல்லியில் மவுஜ்பூர், ஜாப்ராபாத், சீலாம்பூர் போன்ற பகுதிகளில் கல்வீச்சு, வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. கலவரம் பாதித்த இடங்களில் அமைதி திரும்பினாலும் இன்னும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுமையாகத் திறக்கப்படவில்லை. மக்கள் மத்தியில் பீதி இன்னும் மாறவில்லை. இந்நிலையில், டெல்லியில் நடந்த வன்முறைகளில் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்து மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர். கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. குருதேவ் பகதூர் மருத்துவமனையில் 38 பேர், லோக்நாயக் மருத்துவமனையில் 3 பேர், ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில் 4 பேர், பர்வேஷ்சந்தர் மருத்துவமனையில் ஒருவர் என உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கணக்கில் வராமல் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது, வன்முறைகள் குறித்து விசாரிக்க டெல்லி காவல் துறை 2 சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை நியமித்து விசாரித்து வருகிறது. இது வரை 150 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.