தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2க்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இதில், எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.   தமிழகம், புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. இது, அடுத்த மாதம் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ மாணவிகளும், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் மாணவர்கள் முன்கூட்டியே தங்களது தேர்வு மையங்களுக்கு அவர்களது பெற்றோருடன் வந்து ஆர்வமுடன் காத்திருந்தனர். பின்னர், தேர்வு எழுத உள்ளே செல்வதற்கு முன்னர் மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது, காலணி, ஷூ, பெல்ட் உள்ளிட்டவை அணியக்கூடாது, செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. மேலும், அனைத்து மையங்களையும் கண்காணிப்பதற்காக பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் என சுமார் 4 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நேரங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், குற்றமாக கருதப்பட்டு அதற்குரிய தண்டனைகள் வழங்கப்படும். மாணவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டால் பள்ளி அங்கீகாரம் மற்றும் தேர்வு மையம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
More News >>