டெல்லி கலவரம் குறித்து பிரதமரிடம் பேசிய கெஜ்ரிவால்..
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று(மார்ச்3) காலையில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
டெல்லி முதல்வராக 3வது முறையாகப் பதவியேற்றுள்ள ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது பதவியேற்பு விழாவுக்குப் பிரதமர் மோடியை அழைத்திருந்தார். ஆனால், அவர் வாரணாசி சென்று விட்டதால் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு முதல் முறையாகப் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். இன்று காலையில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த கெஜ்ரிவால், பிரதமரைச் சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லி கலவரங்களில் யார் குற்றவாளியாக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினேன். அதே போல், சீன வைரஸ் நோயான கொரோனா வைரஸ், டெல்லியில் பரவ விடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினேன் என்றார்.