டெல்லி கலவரம் குறித்து அனைத்து கட்சி கூட்டம்.. பிரதமருக்குக் கோரிக்கை

டெல்லி கலவரங்கள் மற்றும் நாட்டில் சுமுக நிலை ஏற்படுத்துவது குறித்தும் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி, பிரதமர் ஆலோசிக்க வேண்டுமென்று மூத்த குடிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை(சிஏஏ) எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் கடந்த பிப்.23ம் தேதி முதல் ஒரு வாரமாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 46 பேர் வரை உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மதன் லோக்குர், முன்னாள் எம்.பி. கபிலா வத்ஸ்யான், முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் முச்குந்த் துபே, டெல்லி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தீபக் நய்யார் உள்பட மூத்த குடிமக்கள் பலர் இணைந்து, பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், டெல்லி வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும், நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளனர். மேலும், அனைத்து கட்சி கூட்டத்தைப் பிரதமர் கூட்டி, நாட்டில் சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தக் கருத்தொற்றுமை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

More News >>