விருதுநகரில் வார இதழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்.. அமைச்சரின் ஆட்கள் கைவரிசை?
விருதுநகரில் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை நிருபர் கார்த்தி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆட்களுக்குத் தொடர்பு உள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
தமிழகத்தில் வாரம் இருமுறை வெளியாகும் புலனாய்வு பத்திரிகையான குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி. நேற்று(மார்ச்3) வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் இதழில், ஆளும்கட்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்கும் இடையே உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இதையடுத்து, சிவகாசியில் நேற்றிரவு நிருபர் கார்த்தி மீது சில மர்மநபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொடூரத் தாக்குதலில் நிலைகுலைந்து போன நிருபர் கார்த்தி, சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியான செய்தியால் அதிருப்தி அடைந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் குண்டர்களை ஏவி விட்டு, கார்த்தியைத் தாக்கியதாகச் சிவகாசியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஏற்கனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல முறை வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியிருக்கிறார். கமல் நாக்கை அறுக்க வேண்டும்... ரஜினிக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களைப் பார்த்துக் கொண்டு ரசிகர்கள் சும்மா இருப்பது சங்கடமாக இருக்கிறது... இந்துக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்... என்று வன்முறையைத் தூண்டும் வகையில் அவர் பல முறை பேசினாலும், அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செல்லப்பிள்ளை என்பதால், அவரை காவல்துறையினர் கண்டுகொள்வதே இல்லை. 2021ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகுதான் இந்த காட்சிகள் மாறும் என்று சிவகாசி மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.