இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு..
இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
சீனாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,981 ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 80,200 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் தொடங்கியுள்ளது. இத்தாலியிலிருந்து வந்த 21 பேரில் 14 பேருக்கு நோய்த் தொற்று இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கொரோனா நோய்த் தடுப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:டெல்லியில் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகமாகி இருப்பதாக உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது.
இத்தாலியிலிருந்து வந்த 21 பேரில் 14 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதே போல், இந்தியர்கள் உள்பட மொத்தம் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அவர்கள் சாவ்லாவில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், டெல்லி ஜப்தர்ஜங் மருத்துவமனையில் 25 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவருக்குப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில் 4 பேர் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இது வரை 5 லட்சத்து 89 ஆயிரம் பயணிகளுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இதே போல், வெளிநாடுகளிலிருந்து கடல்வழியாக வந்த 15 ஆயிரம் பேர், நேபாள எல்லை வழியாக வந்த 10 லட்சம் பேர் வரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஏற்கனவே 12 நாடுகளிலிருந்து வருபவர்களை மட்டும் சோதித்து வந்தோம். தற்போது அனைத்து வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஹர்ஷ்வர்தன் கூறினார்.