மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை.. புதிய கட்சி அறிவிப்பு எப்போது?
ரஜினி இன்று தனது மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். இதில் புதிய கட்சி துவக்குவது பற்றிய தகவல்களை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1996ம் ஆண்டில் அதிமுக ஊழல் ஆட்சியை எதிர்த்து, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி துணிச்சலாகப் பேசியது முதல் அவர் அரசியலுக்கு வர வேண்டுமென்று ரசிகர்கள் குரல் கொடுத்து வந்தனர். ஆனாலும், அதற்கு ரஜினி உறுதியான பதிலே சொல்லவில்லை.
திரைத்துறையில் மட்டும், நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்... என்று பல்வேறு வசனங்கள் மூலமாகப் பதில் கொடுத்து வந்தார். கடைசியாகக் கடந்த 2017 டிசம்பர் 31ம் தேதியன்று அவர், நான் அரசியலுக்கு வருவது உறுதி, தனிக் கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று பேட்டி கொடுத்தார். அதற்குப் பிறகு, ரஜினி மக்கள் மன்றத்திற்கு புதிய நிர்வாகிகளையும் மாவட்டச் செயலாளர்களை நியமித்தார். மக்கள் மன்றச் சின்னமாக பாபா முத்திரை போல் ஒரு சின்னத்தைக் காட்டினார். அதன்பிறகு ஆன்மீக அரசியல் செய்யப் போவதாகக் கூறினார்.
ஆனாலும், அவர் பாஜகவுக்கு ஆதரவாகவும், குறிப்பாகப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவைப் பாராட்டியும் பேசி வந்தார். கடைசியாக, அவர் பெரியாரை இகழும் வகையில் பேசியது திராவிட சிந்தனையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதற்குப் பின், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகப் பேசி வந்தார். முஸ்லிம் மதகுருமார்களே போராட்டத்தைத் தூண்டி வருவதாகவும் கூறினார். இதற்கு உலமாக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், அவர்களைச் சந்தித்துப் பேசிய ரஜினி, அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டதாகவும், அவர்களுக்காகக் குரல் கொடுப்பதாகவும் பதிலளித்தார்.
இந்த சூழலில், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம், இன்று(மார்ச்5) 10 மணிக்குச் சென்னையில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக, மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் சேர்க்கை விவரங்கள் மற்றும் மன்றத்தினர் ஆற்றிய பணிகள் குறித்த விவரங்களுடன் வருமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் புதிய கட்சியின் கொடி, பெயர், சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா, கூட்டணி சேருவதா போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்படுகின்றன. இதன் முடிவில், புதிய கட்சி குறித்து ரஜினி அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிகிறது. அனேகமாக, ஏப்ரல் 14 புத்தாண்டில் ரஜினி புதிய கட்சி தொடங்குவார் என்றும் இந்த ஆண்டின் இறுதியில் மாநாடு நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளார்.