இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம்.. கண்காணிப்பில் 28,529 பேர்..
இந்தியாவில் 28,529 பேரை கொரோனா நோய்த் தொற்று உள்ளதாகச் சந்தேகத்தில் கண்காணித்து வருகிறோம் என்று நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் குறித்து விவாதம் நடைபெற்றது.
அப்போது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது இந்தியாவில் மார்ச் 4ம் தேதி வரை 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 28,529 பேரை கொரோனா நோய்த் தொற்று தாக்கியுள்ளதா என்று பரிசோதனை செய்து, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருமே சோதனைக்கு பின்புதான் அனுமதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே 12 நாடுகளிலிருந்து வருபவர்களை மட்டும் சோதித்து வந்தோம். கடந்த வாரம் வரை 21 விமான நிலையங்களில் 5 லட்சத்து 89 ஆயிரம் பேர் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறார்கள். கடல் வழியாக வந்த 15 ஆயிரம் வெளிநாட்டுப் பயணிகளையும் சோதனை செய்திருக்கிறோம். இவ்வாறு ஹர்ஷ்வர்தன் கூறினார்.