எனக்கு ஒரு ஏமாற்றம்.. ரஜினி பரபரப்பு பேட்டி
தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினி, தனக்கு ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம், இன்று(மார்ச்5) 10 மணிக்குச் சென்னையில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் 37 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர்களிடம் ரஜினி கூறியதாவது:அரசியல் இயக்கம் தொடர்பாக, ஓராண்டுக்குப் பிறகு மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்தேன். நிறைய விஷயங்களைப் பரிமாறிக்கொண்டோம். அவர்கள் நிறையக் கேள்விகளை எழுப்பினார்கள். அவர்களுக்குப் பதிலளித்தேன். அதில் அவர்களுக்குத் திருப்தி. ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றமாக இருந்தது. அது என்னவென்று பின்னர் கூறுகிறேன்.
உலமாக்களைச் சந்தித்தது இனிய சந்திப்பு. அவர்கள் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி பற்றி பேசினார்கள். நாட்டில் சகோதரத்துவம், அன்பு, அமைதி நிலவ வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும். நானும் நாட்டில் அமைதி நிலவ உறுதுணையாக இருப்பேன் என்று கூறினேன். பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு இஸ்லாமிய மதகுருமார்களிடம் கூறினேன். அரசியல்வாதிகள் இல்லாமல் அவர்கள் மட்டும் சந்தித்துப் பேசுவதற்குக் கூறினேன். அதற்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாகவும் கூறினேன்.
இவ்வாறு ரஜினி கூறினார். ரஜினி சொன்ன ஏமாற்றம் என்னவென்று கேட்டபோது அதை நேரம் வரும் போது சொல்வேன் என்றார். நீங்கள் ஏற்கனவே சொன்ன தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிரப்புவீர்களா? என்று கேட்டதற்கு, அதைக் காலம்தான் முடிவு செய்யும் என்றார். கமலுடன் கூட்டணி சேருவீர்களா என்று கேட்டதற்கும், காலம்தான் பதில் சொல்லும் என்று பதிலளித்தார்.