கொரோனா தாக்குதல்.. பிரதமர் மோடியின் பிரஸ்சல்ஸ் பயணம் ரத்து..
கொரோனா தாக்குதல் எதிரொலியாகப் பிரதமர் மோடியின் பிரஸ்சல்ஸ் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இது இன்னொருவருக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால், சீனாவில் வேகமாகப் பரவியது. இதன்பின், சீனாவிலிருந்து சென்ற பயணிகள் மூலம் பல நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி, உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
சீனாவில் இது வரை இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3042 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று 30 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் கூட்டமாக உள்ள இடங்களில் வேகமாக வைரஸ் பரவலாம் என்பதால், பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகை(மார்ச்10) கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.மேலும், வரும் 13ம் தேதி பிரஸ்சல்ஸில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு நடைபெறவிருந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக இருந்தது. தற்போது பிரஸ்சல்ஸில் கொரோனா பாதிப்பு மேலும் 10 பேருக்குக் கண்டறியப்பட்டு, இந்த நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாநாட்டில் கலந்து கொள்வோர் மூலம் வெவ்வேறு நாடுகளுக்கு கொரோனா பரவாமல் தடுக்க, இந்தியா-ஐ.யூ மாநாட்டைத் தள்ளி வைக்கக் கோரப்பட்டது. இதையடுத்து, மாநாடு தள்ளி வைக்கப்பட்டதால், பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செயலாளர் ரவீஸ்குமார் தெரிவித்தார்.