இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா நோய்ப் பாதிப்பு..
இந்தியாவில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால், சீனாவில் வேகமாகப் பரவியது. இதன்பின், சீனாவிலிருந்து சென்ற பயணிகள் மூலம் பல நாடுகளிலும் இந்த வைரஸ் பரவியிருக்கிறது.
இந்தியாவில் கடந்த 4ம் தேதி வரை 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 28,529 பேரை கொரோனா நோய்த் தொற்று தாக்கியுள்ளதா என்று பரிசோதனை செய்து, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருமே சோதனைக்கு பின்புதான் அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த வாரம் வரை 21 விமான நிலையங்களில் 5 லட்சத்து 89 ஆயிரம் பேர் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தில் ஒருவருக்கு நேற்று(மார்ச்5) கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் மணீஷ்சிசோடியா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதே போல், பல மாநிலங்களிலும் பள்ளிகளில் மாணவர்கள் முககவசம் அணிந்து வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் கூட்டங்களைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.