பொருளாதாரத்தை அழித்த மோடியின் ஐடியாக்கள்.. ராகுல்காந்தி விமர்சனம்
மோடியும் அவரது ஐடியாக்களும் நாட்டின் பொருளாதாரத்தை அழித்து விட்டன என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிகமான கடன்சுமையால் தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து, வங்கியில் வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து அதிகபட்சமாக ரூ.50,000 வரைதான் எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.
இது பற்றி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில் அவர், நோ எஸ் பேங்க்... மோடியும் அவரது ஐடியாக்களும் நாட்டின் பொருளாதாரத்தை அழித்து விட்டன என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜக கடந்த 6 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. அரசு நிர்வாகம் மற்றும் நிதி அமைப்புகளை நிர்வகிப்பதில் இந்த அரசுக்கு உள்ள திறமை என்னவென்பது இப்போது தெரிந்து விட்டது. முதலில், பி.எம்.சி. பேங்க், இப்போது எஸ்.பேங்க், 3வது பேங்க் எதுவும் வரிசையில் நிற்கிறதா? என்று குறிப்பிட்டிருக்கிறார்.