எஸ் பேங்க் வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக உள்ளது.. நிதியமைச்சர் உத்தரவாதம்..

எஸ் பேங்க் வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக உள்ளது, யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. எஸ் பேங்க்கை நிர்வகிக்க எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் அலுவலரான பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, வங்கியில் வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து அதிகபட்சமாக ரூ.50,000 வரைதான் எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்த தடையால் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள நடுத்தர மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கள் பணம் திருப்பி கிடைக்குமா என்று சந்தேகத்தில் வங்கிக் கிளைகளில் முற்றுகையிட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை, ராகுல்காந்தி உள்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

இந்நியைில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், எஸ் பேங்க் வாடிக்கையாளர்களின் முதலீடுகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவை பத்திரமாக இருக்கிறது. யாரும் அச்சப்படத் தேவையில்லை. முதலீட்டாளர்களின் நலன், வங்கியின் நலன், பொருளாதார நிலையைச் சீராக்குதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் ரிசர்வ் வங்கி கவர்னருடன் தொடர்ந்து பேசி வருகிறேன். விரைவில் எஸ் வங்கி பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும் என்றார்.

More News >>