பீகார் சட்டசபைக்கு எலியுடன் வந்த ராப்ரி..
பீகார் சட்டசபையில் இன்று ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றது.
சட்டசபைக்கு வரும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் எதிர்ப்பை காட்டுவதற்குக் கருப்பு சட்டை அணிதல், பேனர்களைக் கொண்டு வருதல் போன்ற செயல்களைத்தான் செய்வார்கள். தமிழக சட்டசபையில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் திமுக உறுப்பினர்கள் ஜால்ரா எடுத்து வந்து ஆளும்கட்சி பேசும் போது அடித்திருக்கிறார்கள். சபைக்கு வெளியே போட்டி சட்டசபை அமைச்சர்களைப் போல் நடித்து நையாண்டி செய்திருக்கிறார்கள்.
பீகாரில் இதையெல்லாம் விட வித்தியாசமாக ஒன்றைச் செய்திருக்கிறார்கள் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்(ஆர்ஜேடி) எம்.எல்.ஏ.க்கள். அம்மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முக்கிய எதிர்க்கட்சியான ஆர்ஜேடியின் சட்டசபைக் குழு தலைவராக லாலுவின் மனைவி ராப்ரிதேவி உள்ளார். இக்கட்சியினர் கேட்ட சில கேள்விகளுக்கு அம்மாநில அரசு பதிலளிக்கும் போது முக்கியமான ஆவணங்களை எலி கடித்து விட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து, ராப்ரிதேவியும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும் இன்று ஒரு எலியைப் பிடித்து கூண்டில் அடைத்து அதைச் சட்டசபைக்குள் கொண்டு வந்தனர்.
ஆளுங்கட்சியினரைப் பார்த்து, நீங்கள் சொன்ன எலியைப் பிடித்து வந்திருக்கிறோம். நீங்களே தண்டனை கொடுங்கள் என்று கிண்டலாகக் கூறினர். பார்வையாளர்கள் இதைப் பார்த்துச் சிரித்தனர். இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.