அறிவழகனுடன் மீண்டும் இணையும் அருண் விஜய்.. ஆக்ரா, டெல்லியில் சண்டைக் காட்சி படமாகிறது..
நடிகர் அருண் விஜய் தனக்கென கோலிவுட்டில் ஒரு இடத்தை தக்கவைத்திருக்கிறார். கடந்த ஆண்டில் வெளியான 'குற்றம் 23' படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்ததையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார்.
ஹரிதாஸ், நினைத்தாலே இனிக்கும் படங்களை இயக்கிய குமாரவேலன் இயக்கத்தில் சினம் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த மாபியா திரைக்கு வந்தது. இந்நிலையில் குற்றம் 23 படத்தை இயக்கிய அறிவழகன் மீண்டும் அருண் விஜய்யுடன் இணைகிறார். அருணின் 31வது படமாக திரில்லர் பாணியில் இது உருவாகவிருக்கிறது. இப்படத்துக்குத் தற்காலிகமாக 'ஏவி 31' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் அருண் விஜய் ஜோடியாக ரெஜினா நடிக்கிறார். இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு ஆக்ஷன் அதிரடி காட்சிகளுடன் ஆக்ரா மற்றும் டெல்லியில் நடைபெற்று வருவதாக அருண் விஜய் இணைய தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.