புல்வாமாவில் குலாம் நபியைக் கிண்டலடித்த மோடி..
புல்வாமாவில் குலாம் நபி என்ற பயனாளியைச் சந்தித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தைக் கிண்டலடித்தார்.
பிரதமர் மோடி எப்போதும் எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டந்தட்டிப் பேசுவது வழக்கம். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை டியூப்லைட் என்று நாடாளுமன்றத்திலேயே நக்கல் செய்தவர். நாட்டின் முதல் பிரமதர் நேருவில் ஆரம்பித்து இப்போதுள்ள தலைவர்களையும் விமர்சிப்பார். அதே போல், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்படப் பல தலைவர்களையும் மட்டம் தட்டிப் பேசியிருக்கிறார்.
இந்நிலையில், பிரதம மந்திரி மலிவு விலை மருந்து திட்டத்தின்(ஜன் அவுசாதி பரியோஜனா) கீழ் பயனடைந்தவர்களிடம் பிரதமர் மோடி உரையாடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. டெல்லியிலிருந்தபடி வீடியோ கான்பரன்சில் அவர் உரையாற்றினார். அப்போது புல்வாமாவில் இருந்து குலாம் நபி என்பவர் பிரதமரிடம் பேசினார். தான், மலிவு விலை மருந்து திட்டத்தில் மருந்துகள் வாங்கி பயனடைந்ததாகக் கூறி பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
உடனே பிரதமர் மோடி, குலாம் நபி சாகேப், எனக்கு டெல்லியில் உங்கள் பெயரில் ஒரு நண்பர் இருக்கிறார். அடுத்த முறை நான் அவரை பார்க்கும் போது சொல்வேன். புல்வாமாவில் உண்மையான உணர்வு படைத்த குலாம் நபியைப் பார்த்துப் பேசினேன் என்று கிண்டலாகக் கூறினார். காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்தைக் கிண்டலடிக்கிறார் என்பதை உணர்ந்த பயனாளிகள் சிரித்தனர்.