எஸ் பேங்க் சிக்கலில் அதானி நிறுவனம் எப்படித் தப்பியது?
எஸ் பேங்க்கில் இருந்து பாஜகவுக்கு நெருக்கமான நிறுவனங்கள், முன்கூட்டியே பணத்தை எடுத்து விட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. எஸ் பேங்க்கை நிர்வகிக்க எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் அலுவலரான பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, வங்கியில் வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து அதிகபட்சமாக ரூ.50,000 வரைதான் எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கடந்த 3ம் தேதி கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்நிலையில், அந்த வங்கியில் கணக்கு வைத்திருந்த, பாஜகவுக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபர் அதானியின் அதானி காஸ் நிறுவனம், 2 நாட்களுக்கு முன்பாக கணக்குகளை முடித்து கொண்டிருக்கிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பி, எஸ் பேங்க் பரிவர்த்தனை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த வங்கி மூலம் பரிமாற்றம் செய்ய வேண்டாமென்றும் கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதே போல், பாஜக ஆளும் குஜராத்தில் உள்ள வதேதரா பொலிவுறு நகரம்(ஸ்மார்ட் சிட்டி) திட்டத்திற்கான அம்மாநில அரசு அமைப்பு, எஸ் பேங்க் கட்டுப்பாடு கொண்டு வருவதற்கு 2 நாள்கள் முன்பாக கணக்குகளை முடித்துக் கொண்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தகவல்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மட்டும் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி கடந்த 2017ம் ஆண்டில் ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்த போதும் இதே போல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது, பிரதமரின் அறிவிப்புக்கு முன்பாக பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு நெருக்கமான பாஜகவினர், தொழிலதிபர்கள் அந்த கரன்சிகளை கட்டுக்கட்டாக மாற்றியதாகச் செய்திகள் வெளியாயின. மேலும், குஜராத்தில் ஒரு கூட்டுறவு வங்கியில் மட்டும் பல கோடிக்குச் செல்லாத பழைய நோட்டுகள் மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்கு அரசு தரப்பில் விளக்கம் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.