எஸ் பேங்க்: திருப்பதி கோயிலின் ரூ.1300 கோடி தப்பியது.. பூரி கோயிலின் ரூ.545 கோடி சிக்கியது..
நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள எஸ் பேங்கில் வைப்பு நிதியாகப் போட்டிருந்த பணத்தைத் திருப்பதி தேவஸ்தானம் முன்கூட்டியே எடுத்து விட்டதால் தப்பியது. அதே சமயம், பூரி ஜெகன்னாத் கோயிலின் ரூ.545 கோடி அந்த வங்கியில் சிக்கியிருக்கிறது.
தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. எஸ் பேங்க்கை நிர்வகிக்க எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் அலுவலரான பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, வங்கியில் வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து அதிகபட்சமாக ரூ.50,000 வரைதான் எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கடந்த 3ம் தேதி கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்நிலையில், அந்த வங்கியில் பணம் போட்டிருந்த சாதாரண மக்கள், வங்கிக் கிளைகளுக்குப் படையெடுத்துச் சென்று பணத்தைத் திருப்பி எடுத்து வருகின்றனர். இதற்கிடையே, திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் நிர்வாகம்(திருப்பதி திருமலா தேவஸ்தானம்) அந்த வங்கியில் போட்டு வைத்திருந்த ரூ.1300 கோடி டெபாசிட்களையும் முன்கூட்டியே எடுத்து விட்டதால், அவை தப்பி விட்டது என்று தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்த அந்த வங்கியின் அதிகாரி ஒருவர், எஸ் பேங்கில் தேவஸ்தானம் போட்டிருந்த டெபாசிட் ரூ.1300 கோடியும் கடந்தாண்டு அக்டோபரில் முதிர்வு பெற்றது. அதனால், அவை எடுக்கப்பட்டது. மேலும், இனிமேல் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் மட்டுமே டெபாசிட் செய்வது என்று தேவஸ்தான போர்டு அந்த சமயத்தில் முடிவெடுத்தது. அதனால், முதிர்வு தொகை திரும்பப் பெறப்பட்டது என்றார்.
அதே சமயம், ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்னாத் கோயிலின் சார்பில் எஸ் பேங்கில் ரூ.545 கோடி டெபாசிட் போட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அது இன்னும் முதிர்வடையவில்லை. எனினும், தற்போது அந்த பணத்தை மீட்க ஒடிசா மாநில அரசு, ரிசர்வ் வங்கியைத் தொடர்பு கொண்டு வருகிறது.