செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்.. புதுப்பேட்டை 2 ஸ்கிரிப்ட் ரெடி..
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் அறிமுகமானார். இப்படத்தை கஸ்தூரிராஜா இயக்கியிருந்தாலும் அதன் கதையை எழுதியவர் தனுஷின் அண்ணன் செல்வராகவன்.
இப்படத்தையடுத்து தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தை செல்வராகவன் இயக்கினார். இதையடுத்து புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் தனுஷ் நடித்தார். இதில் புதுப்பேட்டைப் படத்தில் கொடி குமார் என்ற கதாபாத்திரத்தில் ரவுடியாக நடித்திருந்தார் தனுஷ். காதல் நாயகனாக வலம் வந்துக் கொண்டிருந்த தனுஷ் இமேஜ் இதன் மூலம் ஆக்ஷன் ஹீரோவானது. இப்படத்தின் 2ம் பாகம் உருவாக்குவதுபற்றி நீண்ட காலமாக ரசிகர்கள் கேட்டு வந்தனர். அதற்கு செல்வராகவனும் சரியான கரு கிடைத்ததும் படமாக்குவேன் என்று கூறி வந்தார். தற்போது அதற்கான நேரம் வந்திருக்கிறது.
சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட செல்வராகவன் புதுப்பேட்டை 2ம் பாகம் படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராகிவிட்டது. அதற்கான பணி விரைவில் தொடங்க உள்ளேன் என்று கூறியிருந்தார். இது தனுஷ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெடிய போடு என்று ஹேஷ்டேக் உருவாக்கி அதில் மகிழ்ச்சியும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படங்களில் நடிப்பதுடன் அட்ராங்கி ரே என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார். இதில் 2 தமிழ் படமும் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்தி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இதற்கிடையில் செல்வராகவனின் புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கும் கால்ஷீட் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.