பெரியார் பற்றி அவதூறு.. ரஜினி மீது வழக்கு பாயுமா?
பெரியார் பற்றி அவதூறாகப் பேசி, வன்முறையைத் தூண்டியதால் ரஜினி மீது வழக்கு தொடரக் கோரிய மனு மீது நாளை(மார்ச்9) தீர்ப்புக் கூறப்படுகிறது.
துக்ளக் பத்திரிகை ஆண்டுவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, கடந்த 1971ம் ஆண்டில் சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ராமர் படத்தைச் செருப்பால் அடித்தனர் என்று குறிப்பிட்டார். வைக்கத்தில் தாழ்த்தப்பட்டோருக்குக் கோயிலுக்குள் நுழையும் அனுமதியைப் பெரியார்தான் பெற்றுத் தந்தார், பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு என்று தமிழகத்திற்குப் பல சமூகப் பணிகளைப் பெரியார் ஆற்றியுள்ளார். அவரை கடவுள் மறுப்பாளர் என்ற ஒரு விஷயத்தை மட்டும் கூறி, கொச்சைப்படுத்துவதா? என்று திராவிட இயக்கத்தினர் கொதித்தெழுந்தனர். ரஜினி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர். ஆனால், ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறி விட்டார். இதையடுத்து, அவர் வீட்டருகே திராவிட இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், பெரியாரை அவதூறாகக் குறிப்பிட்டு, இருபிரிவினிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் ரஜினி பேசியதாகக் கூறி, அவர் மீது தி.க. சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, கடந்த ஜன.18ல் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பின், ஜன.20ல் போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார்.
இதையடுத்து, ரஜினி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடுமாறு, எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை விசாரித்தார். அப்போது ஆஜரான வழக்கறிஞர்கள், டெல்லியில் சிலர் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதால்தான் கலவரம் வெடித்தது. இங்கு ரஜினி பேசியதால் மோதல் ஏற்படாவிட்டாலும், செங்கல்பட்டில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. சேலத்தில் ராமர் ஊர்வலம் நடத்தப்பட்டது. எனவே, வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய ரஜினி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் தனது தீர்ப்பை நாளைக்கு(மார்ச்9) ஒத்திவைத்தார்.