எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூருக்கு 11ம் தேதி வரை காவல்..
எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரை வரும் 11ம் தேதி வரை அமலாக்கத் துறையினரின் காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் வங்கியான எஸ் பேங்க், அதிகமான வராக்கடன்களால் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியது. இதனால், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. எஸ் பேங்க்கை நிர்வகிக்க எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் அலுவலரான பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வங்கியில் வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து அதிகபட்சமாக ரூ.50,000 வரைதான் எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த தடையால் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள நடுத்தர மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மத்திய அரசோ, இந்த வங்கி பிரச்சினைக்கும் முந்தைய காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று வழக்கம் போல் கூறியுள்ளது.இதற்கிடையே, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மும்பை வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, சில ஆவணங்களைக் கைப்பற்றினர். பின்னர், பண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ராணா கபூரை, மும்பை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்து 15 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இன்று(மார்ச்8) அவரை மும்பை விடுமுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 11ம் தேதி வரை அமலாக்கத் துறையினரின் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.