கொரோனா வைரஸ் பாதிப்பு.. முதல்வர் நாளை ஆலோசனை

தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 1086 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. இந்நோயால் அந்நாட்டில் 3500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வரைஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால், சீனாவில் வேகமாகப் பரவியது. இதன்பின், சீனாவிலிருந்து சென்ற பயணிகள் மூலம் பல நாடுகளிலும் இந்த வைரஸ் பரவியிருக்கிறது.

இந்தியாவில் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரம் பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதல் கொரொனா நோய் பாதித்த நோயாளியாகக் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார். இன்ஜினீயரான அவர் சமீபத்தில்தான் ஓமன் நாட்டிலிருந்து திரும்பியிருக்கிறார். அவரை விமான நிலையத்தில் பரிசோதித்த போதே அவருக்குச் சளி, இருமல், காய்ச்சல் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருப்பதாகக் கண்டறியப்பட்டது. அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனியாக வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், இன்னொருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், கொரோனா குறித்து ஆய்வு நடத்திய தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில், கொரோனா நோய் பாதிக்கப்பட்ட ஒருவர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் விமானத்தில் வந்தவர்கள், உடனிருந்தவர்கள் யார், யார் என்பதைப் பட்டியல் எடுத்து அனைவரையும் பரிசோதிக்க ஏற்பாடு செய்துள்ளோம். தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் காய்ச்சல் பாதித்த 1086 பேரைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்என்றார்.

இதற்கிடையே, கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை(மார்ச்9) உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

More News >>