முடிவுக்கு வந்தது கமலின் கட்சி சின்னம் பஞ்சாயத்து!

கமல்ஹாசனின் கட்சி சின்னம் மும்பை செம்பூர் தமிழ் பாசறையின் சின்னத்திலிருந்து எடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை அறிந்த நிர்வாகிகள், அந்த சின்னத்தின் உரிமையை அவரிடம் வழங்கி உள்ளனர்.

கடந்த 21-ஆம் தேதி மதுரை மாநாட்டில் நடிகர் கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்' என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி அதன் சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார். கட்சியின் சின்னத்தில் ஆறு இணைந்த கைகள் இருந்தன. ஆறு கைகளும், ஆறு தென்னிந்திய மாநிலங்களை குறிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை பலரும் அது தங்களது தான் என உரிமை கொண்டாடினார்கள். கட்சியின் சின்னம், வேறு சில அமைப்புகளின் சின்னத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், மும்பை செம்பூர் தமிழ் பாசறையின் சின்னத்திலிருந்து கமல்ஹாசனின் கட்சி சின்னம் எடுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை அறிந்த செம்பூர் தமிழ் மன்ற நிர்வாகிகள், தாங்களே சென்னை வந்து கமல்ஹாசனை சந்தித்து, தங்கள் சின்னத்தின் உரிமையை அவரிடம் வழங்கி அவரது அரசியல் பிரவேசம் வெற்றி பெற வாழ்த்தியுள்ளனர்.

இது குறித்து செம்பூர் தமிழ் பாசறை நிர்வாகி ராஜேந்திரன் பேசுகையில், "தமிழகத்தில் மாற்றம் பிறக்கவேண்டும் என்ற நோக்கில் கமல் அவர்கள் தொடங்கியுள்ள கட்சியின் சின்னம் எங்கள் தமிழ் பாசறை சின்னத்தின் சாயலில் இருப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை.

அவர் அந்த சின்னத்தை பயன்படுத்த அன்புடன் மனமுவந்து முழுஉரிமை தருகிறோம். அவர் கட்டும் ஜனநாயக கோவிலில் எங்கள் பங்கும் இருக்கட்டும். நாங்களும் அந்த சின்னத்தை பயன்படுத்துவோம்" என்று கூறினார்.

More News >>