சட்டசபை இன்று கூடுகிறது.. அன்பழகன் மறைவுக்கு இரங்கல்..
தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
சட்டசபையில் தமிழக அரசின் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தாக்கல் செய்தார். அதன் மீதான பொது விவாதம் 4 நாள் நடைபெற்று சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பின்னர், கடந்த 2-ம் தேதி சபாநாயகர் தனபால் தலைமையில் பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடியது. இதில், மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, சட்டசபை மீண்டும் இன்று கூடுகிறது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மற்றும் அக்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை ஒத்திவைக்கப்படும். மீண்டும் வரும் 11ம் தேதி சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கி, ஏப்ரல் 9 வரை நடைபெறும். இந்த தொடரில் தமிழக அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.
மேலும், இந்த கூட்டத் தொடரில் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், என்பிஆர், என்ஆர்சியை நிறைவேற்ற மாட்டோம் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்ற திமுக குரல் கொடுக்கும். இவற்றை அரசு தரப்பில் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.