தேமுதிகவுக்கு நோ.. ஜி.கே.வாசனுக்கு சீட்.. அதிமுக கூட்டணியில் சலசலப்பு
அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படாததால் தேமுதிக அதிருப்தி அடைந்துள்ளது. கூட்டணியில் இருந்து அக்கட்சி வெளியேறுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.க்கள் திருச்சி சிவா (திமுக) மற்றும் அதிமுகவில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், முத்துகருப்பன், ஏ.கே.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன் ஆகியோரது பதவி காலம் முடிவடைகிறது. இந்த 6 இடங்களுக்கான தேர்தல் வரும் 26ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அதே நாளில். மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் கிடைப்பார்கள். திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோரை வேட்பாளர்களாக ஏற்கனவே அறிவித்து அவர்கள் இன்று(மார்ச்9) வேட்புமனுவும் தாக்கல் செய்து விட்டனர்.
அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, த.மா.கா ஆகிய கட்சிகளும் தங்களுக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டுமென்று கோரி வந்தன. பாஜக சார்பில் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டுத் தோற்ற ஏ.சி.சண்முகத்திற்கும், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷுக்கும், த.மா.கா. சார்பில் ஜி.கே.வாசனுக்கும் சீட் கேட்டு வந்தனர். அதிமுகவிலேயே தம்பிதுரை, கே.பி.முனுசாமி, மைத்ரேயன், தளவாய்சுந்தரம், நத்தம் விசுவநாதன், மனோஜ் பாண்டியன் உள்படப் பலர் சீட் கேட்டு வந்தனர்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட கூட்டறிக்கையில், அதிமுக வேட்பாளர்களாக தம்பிதுரை, கே.பி.முனுசாமி அறிவிக்கப்பட்டனர். மூன்றாவது இடம் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஏ.சி.சண்முகம், எல்.கே.சுதீஷ் ஆகியோர் தங்களுக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், அவர்கள் இருவருக்கும் ஏமாற்றமாகி விட்டது.
ஜி.கே.வாசன் எப்படி சீட் வாங்கினார் என்பதற்கு டெல்லி பிரஷர் தான் காரணம் என்கிறார்கள். பிரதமர் அலுவலகத்தில் இருந்து அதிமுகவுக்குக் கொடுக்கப்பட்ட பிரஷர்தான் ஜி.கே.வாசனுக்கு சீட் கிடைத்தற்குக் காரணம் என்று பேசப்படுகிறது. தற்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளனர். தங்களை விட பலம் குறைந்த கட்சியான த.மா.கா.வுக்கு சீட் ஒதுக்கியது, தங்களுக்கு அவமானம் என்று அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. எனினும், மாநகராட்சி தேர்தலில் 2 மேயர் பதவிகளைக் கேட்பது, அதுவும் கிடைக்காவிட்டால் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி மாறலாம் என்று அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.