காங்கிரசில் இருந்து சிந்தியா விலகல்.. ம.பி. ஆட்சி கவிழ்ப்பு.. சோனியா அதிர்ச்சி..

மத்தியப் பிரதேச காங்கிரஸ் அதிருப்தி தலைவராக உருவெடுத்த ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, காங்கிரசில் இருந்து விலகினார். இதனால், கமல்நாத் அரசு கவிழ்வது உறுதியானது.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 230 எம்.எல்.ஏ.க்களில் காங்கிரசுக்கு 113, பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். 4 சுயேச்சைகள், 2 பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள், ஒரு சமாஜ்வாடி உறுப்பினர் 7 பேர் கமல்நாத் அரசுக்கு ஆதரவு அளித்து வந்தனர்.

வரும் 26ம் தேதி ம.பி.யில் 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், காங்கிரசுக்கு ஒரு இடமும், பாஜகவுக்கு ஒரு இடமும் எளிதாகக் கிடைக்கும். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், சுயேச்சைகள் ஆதரவில் காங்கிரசுக்கு 2வது இடம் கிடைக்கும்.

தற்போது 2வது இடத்தை கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. மேலும், கமல்நாத் அரசைக் கவிழ்க்கவும் திட்டமிட்டது. இதற்காகக் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் என 8 எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் கடத்தி விட்டதாகக் காங்கிரஸ் கடந்த வாரம் குற்றம்சாட்டியது. அதன்பிறகு, அந்த எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் திரும்பி விட்டதாகவும், அதனால் பாஜக கவிழ்ப்பு முயற்சியைத் தள்ளி வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்த சூழ்நிலையில், ம.பி. காங்கிரசில் முக்கிய தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவை பாஜக வளைத்து விட்டதாகவும், அவர் மூலம் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு அவருக்குத் துணை முதல்வர் பதவி அல்லது மத்திய இணையமைச்சர் பதவி தருவதாக வாக்குறுதி தரப்பட்டதாகவும் பேசப்பட்டது. இதற்கேற்ப 17 எம்.எல்.ஏ.க்களுடன் சிந்தியா, கர்நாடகாவிற்குச் சென்று விட்டதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து, நேற்றிரவு கமல்நாத் வீட்டில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இதன்பின், 20 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். புதிய அமைச்சர்களை கமல்நாத் நியமிப்பார் என்று கூறினர். இதில், சிந்தியாவுடன் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி தரப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால், காங்கிரசின் நிலைமை கையை மீறிப் போய் விட்டது. இன்று(மார்ச்10) காலையில் ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடனிருந்தார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர், ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:கடந்த 18 ஆண்டுகளாகக் காங்கிரஸ் உறுப்பினராக பணியாற்றி வந்தேன். தற்போது நான் விலக வேண்டிய நேரம் வந்து விட்டதாக உணர்கிறேன். எனவே, காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே விலகிக் கொள்கிறேன். மக்களுக்கும், மாநிலத்திற்கும், நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்பதே எனது குறிக்கோள். இந்த கட்சியிலிருந்து கொண்டு அதைச் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன். எனவே, புதிய அரசியல் வாழ்வைத் தொடங்குவதற்குச் செல்கிறேன். காங்கிரஸ் கட்சியில் எனக்கு நட்பாகவும், ஒத்துழைப்பாகவும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

இவர் மோடியையும், அமித்ஷாவையும் சந்தித்து விட்டதால், நிச்சயமாக பாஜகவில் இணைவது உறுதியாகி விட்டது. அதனால், ம.பி. காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதும் உறுதியானது.

தற்போது இவரது தலைமையில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் பாஜகவில் சேருவார்கள். அதற்கு முன்பாக அவர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யக் கூடும். அதன்பிறகு, பாஜகவில் சீட் வாங்கி மீண்டும் எம்.எல்.ஏ.வாகி மந்திரியாகி விடவும் வாய்ப்புள்ளது. காரணம், கர்நாடகாவில் அப்படித்தான் காங்கிரஸ், ம.ஜ.த. கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர்கள் எடியூரப்பா அமைச்சரவையில் மந்திரிகள் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், சிந்தியா திடீரென பிரதமரை சந்தித்தது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More News >>