மேலும் ஐந்து நாள் சிபிஐ காவலில் கார்த்தி சிதம்பரம்!
தனியார் ஊடகத்திற்கு அனுமதி கொடுப்பதற்காக 90 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாக கூறப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை மேலும் 5 நாள் சிபிஐ காவல் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்திராணி முகர்ஜியின் ஐஎன்எக்ஸ் [INX] மீடியா நிறுவனம் நியூஸ் எக்ஸ், 9X மற்றும் 9X Music ஆகிய சேனல்களை நடத்தி வருகிறது. இந்த ஊடக நிறுவனத்துக்கான முதலீட்டை 4 கோடி என்ற அளவில் குறைத்து காட்டி வெளிநாடு முதலீடு வளர்ச்சி வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு ப.சிதம்பரம் உதவியதாகவும், அதற்காக 90 லட்சம் ரூபாய் பணத்தை கார்த்தி சிதம்பரம் வாங்கியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டுகிறது. இதனையடுத்து கார்த்தி சிதம்பரம், இந்திராணி உள்ளிட்ட பலர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தொழில் விஷயமாக வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தார். கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த பிரதான வழக்கின் விசாரணை மார்ச் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் லண்டன் சென்று திரும்பிய நிலையில், வழக்கின் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முழு ஒத்துழைப்பு தரவில்லை என குற்றம்சாட்டிய சிபிஐ, கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் இன்று காலை கைது செய்தது.
கைது செய்த கார்த்திக் சிதம்பரத்தை சிபிஐ டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. கார்த்திக் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் மற்றும் சிபிஐ தரப்பு இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து தற்போது கார்த்திக் சிதம்பரத்தை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நீதிபதியின் உத்தரவுப்படி கார்த்தி சிதம்பரத்தை வியாழக்கிழமை (மார்ச் 1) சிபிஐ அதிகாரிகள் நீதிபதி சுமீத் ஆனந்த் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது, கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 5 நாள் சிபிஐ காவல் (மார்ச் 6-ஆம் தேதி வரை) நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக காலை மற்றும் மாலை 1 மணி நேரம் வரை தன்னுடைய வழக்கறிஞருடன் சந்திக்க கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல மருந்துகளை எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வீட்டுச் சாப்பாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.