மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சி கவிழாது.. காங்கிரஸ் நம்பிக்கை..

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சி கவிழாது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர் ஷோபனா ஓசா தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையை பாஜக தொடங்கியுள்ளது. ம.பி.யில் மொத்தம் உள்ள 230 எம்.எல்.ஏ.க்களில் காங்கிரசுக்கு 113, பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். 4 சுயேச்சைகள், 2 பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள், ஒரு சமாஜ்வாடி உறுப்பினர் 7 பேர் கமல்நாத் அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், வரும் 26ம் தேதி ம.பி.யில் 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், காங்கிரசுக்கு ஒரு இடமும், பாஜகவுக்கு ஒரு இடமும் எளிதாகக் கிடைக்கும். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், சுயேச்சைகள் ஆதரவில் காங்கிரசுக்கு 2வது இடம் கிடைக்கும். தற்போது 2வது இடத்தை கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. மேலும், கமல்நாத் அரசைக் கவிழ்க்கவும் திட்டமிட்டது.

ஏற்கனவே மணிப்பூர், கோவா, கர்நாடகாவில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி சேர்த்த போது நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் விமர்சனம் செய்திருந்தனர். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், இதுதான் எங்கள் அரசியல்... நாங்கள் எழுதுவதுதான் அரசியல் சட்டம்... என்ற ரீதியில் மத்தியப் பிரதேசத்திலும் ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். ம.பி. காங்கிரஸ் அதிருப்தி தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா திடீரென பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அமித்ஷாவும் உடனிருந்தார். இந்த சந்திப்பு முடிந்ததும் சிந்தியா, காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் பெங்களூரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த ம.பி. அமைச்சர்கள் 6 பேர் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தாங்களும் எம்.எல்.ஏ. பதவி மற்றும் காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். நேற்றிரவு, இன்னொரு 3 பேர் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து, சட்டசபையில் காங்கிரசின் பலம் குறைவதால், கமல்நாத் ஆட்சி கவிழ்வது உறுதியாகியுள்ளது.

இந்த சூழலில், ம.பி. தலைநகர் போபாலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று(மார்ச்10) மாலை நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின், காங்கிரஸ் மூத்த தலைவர் ஷோபனா ஓசா கூறுகையில், கூட்டம் சுமுகமாக நடந்தது. அனைவருமே முதல்வர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியா, தனக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வேண்டுமென்பதற்காக பாஜகவில் சேருகிறார். இது தெரிந்ததும் அவர் பின்னால் சென்ற எம்.எல்.ஏ.க்கள் கோபம் அடைந்துள்ளனர். அவர்கள் முதல்வருடன் தொடர்பில் உள்ளனர். எனவே, ஆட்சி கவிழாது. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் அரசு வெற்றி பெறும் என்றார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமண்சிங் கூறுகையில், சுயேச்சை உறுப்பினர்கள் உள்பட 94 எம்.எல்.ஏ.க்கள் எங்களிடம் உள்ளனர். எங்களின் உணர்வுகளை யாரும் அழித்து விட முடியாது என்றார். முதல்வர் கமல்நாத் நேற்றிரவு கூறுகையில், ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. நிச்சயமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்றார்.

இதற்கிடையே, பாஜகவும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தியது. அதில், முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் கலந்து கொண்டார். அதில், பாஜக ஆட்சி அமைவது உறுதி, யாரும் கட்சி மாறும் எண்ணத்திற்குச் செல்லக் கூடாது என்று எம்.எல்.ஏ.க்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

More News >>