இந்தியாவில் இது வரை 61 பேருக்கு கொரோனா.. பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளுக்குத் தடை
நாட்டில் நேற்று வரை 61 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி நாட்டுப் பயணிகளுக்கு அளிக்கப்பட்ட விசாவை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது.
சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. சீனா முழுவதும் பரவியுள்ள இந்த நோய் தாக்குதலில் சீனாவில் மட்டும் 3,136 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 100 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்தியாவில் நேற்று(மார்ச்11) மட்டும் கேரளாவில் 8 பேர், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தலா 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் இதுவரை 61 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு, தனி வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே பல நாடுகளுக்கு விசாவை ரத்து செய்த மத்திய அரசு, நேற்று முதல் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் விசாவை ரத்து செய்திருக்கிறது. கடந்த 3ம் தேதிக்கு முன்பு அளிக்கப்பட்ட இ-விசா மூலம் இந்தியாவுக்குள் வந்து விட்டவர்களைத் தவிர மற்றவர்களின் விசா ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், கொரோனா நோய் தாக்குதலில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, ஈரான் நாடுகளிலிருந்து திரும்பி வரும் இந்தியர்கள், அந்த நாடுகளில் கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்பட்டு, மருத்துவச் சான்றிதழ் பெற்று வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஈரானில் இருந்து 58 இந்தியர்கள் தனி விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் தனியாக ஓரிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள்.