தலைவராகும் நடிகர் ரஜினி.. இன்று புதுக்கட்சி அறிவிப்பு
ரஜினி இன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார்.
கடந்த 1996ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளிக்கும் போது, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று துணிச்சலாகப் பேட்டி கொடுத்தார். அதன்பிறகு, திமுக-த.மா.கா கூட்டணிக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார். அந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஜெயலலிதாவே பர்கூரில் தோற்றார்.
இதையடுத்து, ரஜினி குரல் கொடுத்ததால்தான் திமுக கூட்டணியே வென்றது என்று ரஜினி ரசிகர்கள் பேசத் தொடங்கினர். அது முதல் அவரை வலுக்கட்டாயமாக அரசியலுக்கு அழைத்தனர். ஆனால், அவர் அரசியலுக்கு வருவதற்கு மிகவும் தயங்கினார். ஆனாலும் அரசியலுக்கு வருவேன் என்று அவ்வப்போது பூடகமாகப் பேசி வந்தார்.
கடைசியாகக் கடந்த 2017 டிசம்பர் 31ம் தேதியன்று அவர், நான் அரசியலுக்கு வருவது உறுதி, தனிக் கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று பேட்டி கொடுத்தார். அதற்குப் பிறகு, ரஜினி மக்கள் மன்றத்திற்கு புதிய நிர்வாகிகளையும் மாவட்டச் செயலாளர்களை நியமித்தார்.இதற்குப் பின்னர், கடந்த 5ம் தேதியன்று தனது மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை அழைத்து ரஜினி ஆலோசனை நடத்தினார். அப்போது, தனக்கு முதலமைச்சர் ஆக ஆசையில்லை என்றும் வேறொருவரை தான் கைகாட்டுவதாகவும், கட்சிக்கு மட்டும் தான் தலைமை ஏற்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், இப்படிச் செய்தால் மக்களிடம் ஓட்டு கிடைக்காது என்று மாவட்டச் செயலாளர்கள் கூறியுள்ளனர். அதே போல், கட்சி தொடங்கியவுடன் மாற்றுக் கட்சிகளிலிருந்து வரும் முக்கியப் பிரமுகர்களுக்குப் பதவி தரப்படும் என்றும் மன்ற நிர்வாகிகள் தொடர்ந்து அதே பொறுப்பில் இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதுவும் நீண்ட காலமாகப் பதவிக்காகக் காத்திருந்த மன்ற நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியளித்தது. இதன்பின், ரஜினி பேட்டியளித்த போது, கூட்டத்தில் தனது நிர்வாகிகளின் கேள்விகளுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் தான் பதிலளித்ததாகவும், அதே சமயம் தனக்கு ஒரு ஏமாற்றம் என்றும் கூறினார். இது பெரிய விவாதத்தைக் கிளப்பி விட்டது. இந்த சூழ்நிலையில், ரஜினி இன்று (மார்ச்12) காலை 8 மணிக்குத் தனது மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வருமாறு கூறியுள்ளார். அவர்களிடம் புதிய கட்சி, கொடி போன்றவை குறித்து ஆலோசிக்கவுள்ளார்.
இதன்பின்பு, லீலா பேலஸ் ஓட்டலில் காலை 10.30 மணிக்குச் செய்தியாளர்களை ரஜினி சந்திக்கிறார். அதில் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுகிறார். கட்சியின் முதல் மாநாடு, தொண்டர்களைச் சந்திப்பது உள்ளிட்ட விஷயங்களை அவர் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்.
ரஜினியின் ரசிகர்கள் மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் அவர் கட்சி தொடங்குவதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அதே சமயம், திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், அவரை பாஜகவின் பி டீம் என்றுதான் விமர்சிக்கிறார்கள். மேலும், அவர் ஆன்மீக அரசியல் என்றும், பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு ஆதரவான கருத்துக்களையும் சொல்லி வந்ததால், திராவிட சிந்தனையாளர்களும், சிறுபான்மையினரும் அவரது புதிய கட்சியை எந்த அளவுக்கு நம்புவார்கள் என்பது போகப் போகத் தெரியும்.