2021 பிப்ரவரியில் சசிகலா வருவார்.. டி.டி.வி.தினகரன் பேட்டி
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சசிகலா விடுதலையாகி வருவார். அவர் அ.ம.மு.க.வுக்குத்தான் வருவார். சட்டசபைத் தேர்தலில் அ.ம.மு.க. கூட்டணியே வெற்றி பெறும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
சென்னை அசோக்நகரில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான கட்டிடத்தில் அ.ம.மு.க. தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்தது. அவர் அதிமுகவுக்குத் திரும்பிச் சென்றதை அடுத்து, அ.ம.மு.க. தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில் உள்ள ஒரு கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இன்று(மார்ச்13) காலை 10.30 மணியளவில் இதன் திறப்பு விழா நடைபெற்றது. கட்சி அலுவலகத்தைக் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு:நாடாளுமன்றத் தேர்தலிலேயே கூட்டணி அமைக்க முயற்சி செய்தோம். ஆனால், சின்னம் கிடைப்பதில் தாமதம் ஆனதால் முடியாமல் போனது. இப்போது கட்சிக்குத் தேர்தல் ஆணையத்திடம் அங்கிகாரம் கிடைத்து விட்டது. உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கிறோம்.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் ஒரு கூட்டணி அமைத்து அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வருவோம். சசிகலா அடுத்த ஆண்டு பிப்ரவரியில் விடுதலையாகி விடுவார். அதற்கு முன்பே அவர் வெளியே வருவதற்கு சட்டரீதியாக முயற்சி செய்து வருகிறோம். அவர் வெளியே வந்ததும் எங்களுடன்தான் இருப்பார். என்னைப் பிடிக்காத சிலர் சில வதந்திகளைப் பரப்பி விடுகிறார்கள். எங்களுக்குத் தொண்டர்கள், நிர்வாகிகளே பிரசாந்த் கிஷோர்களாக இருப்பதால், வேறு பிரசாந்த் கிஷோர் தேவையில்லை.இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார்.