பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியால் 45 நிமிடம் முடங்கியது..
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று(மார்ச்13) வர்த்தகம் தொடங்கியதும் வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது. இதனால், 45 நிமிடங்களுக்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டு, மீண்டும் வர்த்தகம் சிறிது முன்னேற்றத்துடன் தொடங்கியது.
இந்தியப் பங்குச் சந்தை வரலாற்றில் இல்லாத அளவுக்கு இன்று காலையில் கடும் சரிவு ஏற்பட்டது. முதலீட்டாளர்களுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 3090 புள்ளிகள் சரிந்து, 29,687 புள்ளிகளில் வர்த்தகம் நடந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 966 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, 8,624 புள்ளிகளில் வர்த்தகம் சென்றது.
இதையடுத்து, இந்தியப் பங்குச் சந்தைகளில் பிரேக்கிங் சர்குலர் மூலம் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி 45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ.74.43 ஆக வீழ்ச்சியடைந்தது.
இந்த நிலையில், வர்த்தகம் மீண்டும் தொடங்கியதும் சென்செக்ஸ் 3,600 புள்ளிகள் முன்னேற்றம் கண்டு 33 ஆயிரம் புள்ளிகளாக உயர்ந்தது. இதன்மூலம் 250 புள்ளிகள் கூடுதலாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதுபோன்று தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 9,600 புள்ளிகளாக ஏற்றம் கண்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.