இந்தியாவில் 75 பேருக்கு கொரோனா நோய்ப் பாதிப்பு.. மத்திய அரசு தகவல்
இந்தியாவில் 75 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. சீனா முழுவதும் பரவியுள்ள இந்த நோய் தாக்குதலில் சீனாவில் மட்டும் 3,200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 100 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்தியாவில் கர்நாடகாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மட்டும் கொரோனா தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இன்று(மார்ச்13) காலை 10 மணி நிலவரப்படி, நாட்டில் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாகக் கேரளாவில் 17 பேர், மகாராஷ்டிராவில் 11, உத்தரப்பிரதேசத்தில் 10, டெல்லியில் 6, கர்நாடகாவில் 5 லடாக்கில் 3 மற்றும் ராஜஸ்தான், பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒன்று என மொத்தம் 58 பேருக்கு கொரோனா தொற்றுக்காகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதே போல், இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டவர்களில் ஹரியானாவில் 14 பேர், ராஜஸ்தானில் 2 பேர், உ.பி.யில் ஒருவர் என 17 வெளிநாட்டினருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.