கொரோனா பாதிக்கப்பட்ட டெல்லி மூதாட்டி சாவு... இந்தியாவில் 82 பேருக்குப் பாதிப்பு
இந்தியாவில் கொரோனாவுக்கு 2வது பலியாக டெல்லி மூதாட்டி ஒருவர் இறந்தார். நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்தது.
சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் முதன் முதலாகக் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. தற்போது சீனா முழுவதும் பரவியுள்ள இந்த நோய் தாக்குதலில், அந்நாட்டில் மட்டும் 3,200 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 124 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்தியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடகாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர், கொரோனா தாக்குதலில் உயிரிழந்தார். நாடு முழுவதும் நேற்றுவரை 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லியில் 68 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா நோயால் உயிரிழந்தார். ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். இன்று(மார்ச்14), கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்து விட்டது. அதிகபட்சமாகக் கேரளாவில் 19 பேர், மகாராஷ்டிராவில் 11, உத்தரப்பிரதேசத்தில் 10, டெல்லியில் 7, கர்நாடகாவில் 5 லடாக்கில் 3 மற்றும் ஹரியானாவில் வெளிநாட்டினர் 17 பேர், மற்ற மாநிலங்களில் ஓரிருவர் என்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி, பீகார், கர்நாடகா, ஒடிசா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் வரும் 31ம் தேதி வரை பொது நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரியானாவில் பொது மக்கள் கூடும் திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, ஈரானிலிருந்து மும்பைக்கு அழைத்து வரப்பட்ட 44 இந்தியர்கள், ராணுவ இடத்தில் தங்க வைக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள்.