பெட்ரோல், டீசல் வரி உயர்வுக்கு அழகிரி கண்டனம்

பெட்ரோல், டீசல் வரிகளை மத்திய அரசு உயர்த்தியுள்ளதற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜனவரி 1ம் தேதி ஒரு பேரல் 61.13 டாலராக இருந்தது. அப்போது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 78.12 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 71.86ஆகவும் இருந்தது.

தற்போது கச்சா எண்ணெய் விலை 32 டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சியின் காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.57 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.49 ஆகவும் விற்கப்பட வேண்டும். ஆனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.57, ஒரு லிட்டர் டீசல் ரூ.66.20 என விற்கப்படுகிறது. இத்தகைய விலை உயர்வுக்குக் காரணம் மத்திய அரசின் தவறான கொள்கைகள் தான்.சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலன் மக்களுக்குப் போய்ச் சேரும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய பாஜக அரசு குறைத்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2-ல் இருந்து ரூ.8 ஆகவும், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2-ல் இருந்து ரூ.4 ஆகவும் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

மேலும், சாலை வரியும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒரு ரூபாயும், டீசலுக்கு ரூ.10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகக் கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.22.98 ஆகவும், டீசலுக்கு ரூபாய் 18.83 ஆகவும் கடுமையாக உயர்த்தியிருக்கிறது. பாஜக ஆட்சியில் இதுவரை 9 முறை கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், மத்திய பாஜக அரசு 39 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றிருக்கிறது. 2014ம் ஆண்டில் நரேந்திர மோடி ஆட்சி அமைந்தபோது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரி வெறும் ரூ.9.48ஆகவும், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.3.56 ஆகவே இருந்தது. இதற்கு பிறகு, பெட்ரோலில் ரூ.13.50 மற்றும் டீசலில் ரூ.15.27 கூடுதலாகக் கலால் வரி விதித்து, மத்திய அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. இதைவிட மக்கள் விரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாதுஇவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார்.

More News >>