ம.பி. சட்டசபையில் இன்று கவர்னர் உரை.. நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை
ம.பி. சட்டசபையில் இன்று காலை கவர்னர் லால்ஜி டாண்டனர் உரையாற்றுகிறார். அதே சமயம், அவர் உத்தரவிட்டிருந்தபடி, கமல்நாத் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாது என்று தெரிகிறது.
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி அங்கு 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு கமல்நாத் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக களம் இறங்கியது. இதனால் அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரசைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக மாறினர். அவர்கள் பெங்களூருவில் உள்ள ஓட்டலுக்குச் சென்று தங்கினர். அவர்களை பாஜகவினர் கடத்தி விட்டதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இதையடுத்து, பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டிருந்த 22 காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாகவும், காங்கிரசில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை பாஜக தலைவர்கள் கொண்டு வந்து சபாநாயகர் பிரஜாபதியிடம் அளித்தனர். இதைப் பெற்ற சபாநாயகர், அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதில், அவர்கள் விருப்பப்பட்டு ராஜினாமா செய்கிறார்களா அல்லது யாருடைய நிர்ப்பந்தத்தின் பேரில் விலகுகிறார்களா என்று கேட்டு, அதற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கூறியிருந்தார்.
அதே சமயம், அந்த 22 பேரில் 6 அமைச்சர்களும் இருந்தனர். அவர்களை கமல்நாத் பதவிநீக்கம் செய்தார். அதனால், அந்த 6 பேரின் ராஜினாமா கடிதங்களை மட்டும் சபாநாயகர் பிரஜாபதி ஏற்றுக் கொண்டு, எம்.எல்.ஏ. பதவியையும் பறித்தார். இந்த சூழ்நிலையில், சட்டசபையில் இன்று(மார்ச்16) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு கமல்நாத் அரசுக்கு கவர்னர் லால்ஜி டாண்டன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
ஆனால், சபாநாயகர் பிரஜாபதி இதை ஏற்கவில்லை. இன்று காலை 10 மணிக்கு கவர்னர் லால்ஜி டாண்டன் உரையாற்றுவார் என்றும் அதைத் தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் சபாநாயகர் வெளியிட்ட சட்டசபை நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டிருக்கிறது.
இது பற்றி, சபாநாயகர் பிரஜாபதியிடம் நேற்று நிருபர்கள் கேட்டதற்கு, சட்டசபையில் எப்போது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று நான் விதிகளைப் பார்த்து விட்டு, நாளை(இன்று) முடிவு சொல்வேன். எந்த விஷயத்திலும் அவசரமாக நான் முடிவெடுக்க முடியாது என்று அவர் கூறினார்.
இதற்கிடையே,பாஜகவின் பிடியில் பெங்களூரு ரிசார்ட்டில் உள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டசபைக்கு வருவார்களா என்பது சந்தேகமாக உள்ளது. அதேசமயம், ஜெய்ப்பூரில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், குருகிராமில் தங்கியிருந்த பாஜக எம்.எல்.ஏ.க்களும் போபாலுக்கு வந்துள்ளனர். இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் அரசு கவிழுமா, அல்லது மேஜிக் நம்பரை கமல்நாத் எட்டி விடுவாரா என்ற அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.