எஸ் பேங்க் முறைகேடு.. அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன்..

எஸ் பேங்க் முறைகேடு வழக்கு தொடர்பாக, தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருக்கிறது.

தனியார் வங்கியான எஸ் பேங்க், அதிகமான வராக்கடன்களால் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியது. இதனால், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. எஸ் பேங்க்கை நிர்வகிக்க எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் அலுவலரான பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மும்பை வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, சில ஆவணங்களைக் கைப்பற்றினர். பின்னர், பண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

ரிலையன்ஸ் குரூப் சேர்மன் அனில் அம்பானி உள்பட பாஜகவுக்கு நெருக்கமான தொழிலதிபர்களே எஸ் பேங்க்கில் தங்கள் கம்பெனி பெயர்களில் கோடிக்கணக்கில் கடன் வாங்கியிருக்கின்றனர். இதனால்தான், வங்கியின் வராக்கடன்கள் அதிகரித்து வங்கி திவாலாகும் நிலைக்குப் போனது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், ராணா கபூர் வழக்கில் அனில் அம்பானியிடம் விசாரணை நடத்துவதற்காக மத்திய அமலாக்கத் துறையினர் அம்பானிக்குச் சம்மன் அனுப்பியிருக்கின்றனர். அவர் இன்று மும்பை அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமெனச் சம்மனில் கூறப்பட்டது. ஆனால், அனில் அம்பானி தனது உடல்நிலையைக் காரணம் காட்டி இன்று ஆஜராகவில்லை. இதனால் இன்னொரு நாளில் அவர் ஆஜராக வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

More News >>